தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!
Milk Price Hike tamilnadu
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிரின் விற்பனை விலை உயர்வு அமலுக்கு வந்து ஒரு மாதமே ஆகும் நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஹட்சன் நிறுவனம் இன்று (13-ந் தேதி) இரவு முதல், நாளை (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஆரோக்யா பாலுக்கான விற்பனை விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், தயிருக்கான விற்பனை விலையை கிலோவுக்கு 3 ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கியுள்ளது.
அதன்படி நிறைகொழுப்பு பால் 500 மிலி 38 ரூபாயில் இருந்து 40.00ரூபாயாகவும், ஒரு லிட்டர் 71.00ரூபாயில் இருந்து 75 ரூபாயாகவும், மற்றொரு வகை ஒரு லிட்டர் 78 ரூபாயில் இருந்து 82 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 500 மிலி 33 ரூபாயில் இருந்து 34 ரூபாயாகவும், 1 லிட்டர் 63 ரூபாயில் இருந்து 65 ரூபாயாகவும், தயிர் 400 கிராம் 32 ரூபாயில் இருந்து 33 ரூபாயாகவும் உயர்கிறது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு அதிகளவில் பயன்படுத்தப்படும் நிறைகொழுப்பு பாலின் விற்பனை விலை லிட்டர் 80 ரூபாய் என்கிற இமாலய இலக்கை தொட்டிருக்கிறது.
ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தும் ஹட்சன் நிறுவனத்தின் தன்னிச்சையான விற்பனை விலை உயர்வு அறிவிப்பிற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஏனெனில் உணவகங்கள், தேனீர் கடைகள் மற்றும் தனியார் அலுவலக கேண்டீன்கள் அனைத்தும் ஹட்சன் போன்ற முன்னணி தனியார் நிறுவனங்களின் பாலினை பயன்படுத்தி வருவதால் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதால் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக உயரும்.
இதனால் மாதாந்திர ஊதியம் பெறும் பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மேலும் கோடை காலம் தொடங்கவிருக்கும் தற்போதைய சூழலில் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி சற்றே சரிவடையத் தொடங்கி இருந்தாலும் கூட பால் கொள்முதல் விலையிலோ அல்லது மூலப்பொருட்கள் விலையிலோ எந்தவிதமான உயர்வோ அல்லது மாற்றங்களோ இல்லாத இந்த காலகட்டத்தில் ஹட்சன் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான பால் விற்பனை விலை உயர்வானது பிற தனியார் பால் நிறுவனங்களின் பால் மற்றும் தயிர் விற்பனை விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் என்பதால் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை ஹட்சன் நிறுவனம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
English Summary
Milk Price Hike tamilnadu