டங்ஸ்டன் திட்டம் வருவதற்கு திராவிட அரசு அனுமதிக்காது - அமைச்சர் மூர்த்தி தகவல்.!
minister moorthy speech about tungsten in madurai
டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் அருகே அரிட்டாபட்டி, வெள்ளரிப்பட்டி, நாயக்கர்பட்டி, அ.வல்லாளப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த சுரங்கம் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இந்த திட்டத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் படி நேற்று முன்தினம் மேலூர் பகுதியிலுள்ள முல்லைப்பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம், மேலூர் தொகுதி அனைத்து வணிகர்கள் சங்க கூட்டமைப்பு, டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி பேரணி சென்றனர்.
இந்த நிலையில், இன்று காலை அரிட்டாபட்டி கிராமத்திற்கு சென்ற அமைச்சர் மூர்த்தி பொதுமக்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- "தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கூடாது என்று அனைத்து கட்சியினரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசின் நிலைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
இருப்பினும், மக்களுக்கு அச்சத்தைப் போக்குகின்ற வகையிலே சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிராம மக்களிடம் எடுத்து கூறியுள்ளோம். நமது திராவிட மாடல் ஆட்சி ஒரு போதும் மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் வருவதற்கு அனுமதிக்காது. இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்ல முடியாது என்று சட்டமன்றத்திலே நிதி அமைச்சர் உறுதி அளித்திருக்கிறார்.
தமிழக முதலமைச்சரின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டர், மாவட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் மக்களின் அச்சத்தை போக்குகின்ற வகையிலே தமிழக முதல்வரின் கருத்தை மக்களிடம் எடுத்துரைத்திருக்கிறோம். நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராமல் இருக்க அத்தனை நடவடிக்கையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்திருக்கிறார்.
யார், யார் எதையெல்லாம் வந்து இங்கு சொன்னாலும் இந்த பகுதி மக்களை பாதுகாக்கின்ற பொறுப்பு எங்கள் கடமை என்று தமிழக முதலமைச்சர் சொல்லி இருக்கிறார். டங்ஸ்டன் பேரணி தொடர்பாக 5 ஆயிரம் பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.
English Summary
minister moorthy speech about tungsten in madurai