பாதகமாக மாறிய சாட்சிகள்! பொன்முடி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து... நீதிபதி பூர்ணிமா பிறப்பித்த உத்தரவு!
Minister Ponmudi Vilupuram Quarry Case
விழுப்புரம் மாவட்டம், பூத்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து முறைகேடு செய்ததாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு, இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் நேரில் ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அம்மனு மீதான விசாரணைக்காக ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் , இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நீதிபதி பூர்ணிமா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
English Summary
Minister Ponmudi Vilupuram Quarry Case