நெல்லை: இறந்த தாயின் உடலை 15 கி.மீ எடுத்துச் சென்ற மகன்: உண்மை என்ன? வதந்தியை பரப்ப வேண்டாம்!
Nellai Son Mother Dead body incident Fact check
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வலுக்கட்டாயமாக நோயாளி வெளியேற்றப்பட்டு உயிரிழந்ததாக வெளியான செய்திக்கு தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
யார் அந்த தாய்?
நாங்குநேரி வட்டம் மீனவன்குளம் கிராமத்தை சார்ந்த பாலன் மற்றும் சவரிமுத்து ஆகியோரின் தாயார் சிவகாமி , க/பெ ஜெபமாலை அவர்கள் அவரது வீட்டில் மயக்கமடைந்ததால் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை சிகிச்சை:
பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 22.1.2025 அன்று 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பபடுள்ளார்.
அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. உணவும் அருந்திவந்துளார்.
சர்ச்சைக்கு காரணம்:
23.01.2025 அன்று காலை பாலன் அவரது தாயாரை தன்னிச்சையாக மருத்துவர்கள் அனுமதியின்றி வீட்டுக்கு அழைத்துச் சென்றுளார்.
அவர் தனது தாயாரை அழைத்துச் செல்வது மருத்துவமனை சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் அருகில் உள்ள உணவு சத்திரத்தில் உணவு அருந்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் தனது தாயாரை சைக்கிளில் அமரவைத்து சென்றுள்ளதாக தெரிகிறது.
காவல்துறை நடவடிக்கை:
23.01.2025 அன்று இரவு 9.00 மணியளவில் திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில் மூன்றடைப்பு புதிய பாலம் அருகில் அவர் வரும்போது அங்கு வாகனத் தணிக்கையில் இருந்த காவல் துறையினர் இவர்கள் வருவதைக் கண்டு நிறுத்தி பார்த்தபோது சிவகாமி அவர்கள் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனே சிவகாமியின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று (24.01.2025) அன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சிவகாமியின் உடலை அவரது மற்றொரு மகன் சவரிமுத்துவிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உண்மையில் நடந்தது இதுதான்:
பாலன் என்பவர் தன்னிச்சையாக தனது தாயாரை அழைத்துச் சென்றுள்ளனர்; அவர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுவது உண்மையல்ல என்பது விசாரணை மூலமாகவும் சி.சி.டி.வி பதிவுகள் மூலமாகவும் தெரியவருகிறது
மருத்துவமனை கட்டமைப்பு:
ஆதரவற்ற நோயாளிகள் இருந்தால் அவர்களை கவனிப்பதற்கு தன்னார்வ அமைப்புகளோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
அதேபோல உரிய வசதிகளின்றி யாரேனும் உயிரிழந்தால் அவர்களை நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து உதவிகளும் தன்னார்வலர்கள் மூலமாகவும் மருத்துவக் கல்லூரி மூலமாகவும் மேற்கொள்ளப்படும். எனவே இதுபோல வலுக்கட்டாயமாக அனுப்ப வேண்டிய சூழல் இல்லை.
ஆகவே இதுபோன்ற முழுமையற்ற செய்திகளை பரப்பிட வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் விளக்கமளித்துள்ளார்.
English Summary
Nellai Son Mother Dead body incident Fact check