பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை! சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.!
People's welfare workers
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு முந்தைய திமுக ஆட்சியில் மக்கள் நலப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்தனர்.
இதனையடுத்து 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார். விருப்பம் உள்ள பணியாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்களாக சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு 7,500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்காலத்தில் 25 ஆயிரம் பேர் மக்கள் நலப்பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர் என்றும், அவர்கள் அனைவரும் அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.