கடலூர்: அதிகமாக தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு திறக்க மறுப்பது அநீதி - அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியை நம்பி சம்பா சாகுபடி செய்யும் விவசாயிகள் பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். 

சம்பா சாகுபடிக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது வரை தண்ணீர் திறக்கப்படாததால், பயிர்கள் வாடும் நிலை உருவாகியிருக்கிறது. 

விவசாயிகளுக்கு நம்பிக்கையைக் கொடுத்து பயிர் சாகுபடி செய்ய அறிவுறுத்தி விட்டு, இப்போது தண்ணீரை திறக்காமல் உழவர்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது என்று, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகில் அமைந்துள்ள வீராணம் ஏரி அம்மாவட்டத்தின் முதன்மையான பாசன ஆதாரங்களில் ஒன்றாகும். மொத்தம் 47.50 அடி உயரமும், 1.46 டி.எம்.சி கொள்ளளவும் கொண்ட வீராணம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பி காட்டுமன்னார் கோயில், சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் 44 ஆயிரத்து 856 ஏக்கரில் நெல் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போகம் சாகுபடி நடைபெறும் என்றாலும் கூட, வீராணம் ஏரியின் பாசனப் பகுதிகளில் சம்பா பருவ சாகுபடி மட்டுமே செய்யப்படுவது வழக்கம்.

மேட்டூர் அணையில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருப்பதாலும், செப்டம்பர் 13ம் தேதி முதல் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததாலும் இந்த முறை சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே நெல் பயிரிட்டு வருகின்றனர். 

ஆனால், வீராணம் ஏரியிலிருந்து இன்று வரை கடலூர் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவில்லை. ஒரு புறம் வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு சராசரியாக 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. 

மற்றொருபுறம், பாசனக் கால்வாய்களும், குளங்களும் தூர்வாரப்படாததால் தான் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட வில்லை என்று இன்னொருதரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் எது உண்மை எனத் தெரியவில்லை.

சரியான நேரத்தில் செய்யப்படாத எந்த செயலும் பயனற்றதாகவே இருக்கும். இது வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதற்கும் பொருந்தும். வீராணம் பாசனப்பகுதி நிலங்களுக்கு இப்போது தான் தண்ணீர் தேவை. இன்னும் ஒரு மாதத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும் என்பதால், அப்போது தண்ணீர் தேவைப்படாது. 

இப்போது தேவைப்படும் நேரத்தில் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை என்றால், விவசாயிகளுக்கு இருவகையான பாதிப்புகள் ஏற்படும். முதலாவது, போதிய தண்ணீர் இல்லாவிட்டால் நெற்பயிர்கள் வெயிலைத் தாங்க முடியாமல் வாடி விடும். இரண்டாவதாக, வெப்பத்தை தாக்குபிடித்து நெற்பயிர்கள் நின்றாலும் கூட, ஓர் அடிக்கும் கூடுதலாக வளரவில்லை என்றால், வடகிழக்கு பருவ மழையில் மூழ்கி அழுகி விடும்.

இந்த இரு ஆபத்துகளில் இருந்தும் சம்பா நெற்பயிர்களைக் காக்க வேண்டுமானால், அடுத்த ஒரு மாதத்திற்குள் ஓர் அடி உயரத்திற்கு பயிர்கள் வளருவதை உறுதி செய்யும் அளவுக்கு வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட வேண்டும். வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கான தண்ணீர் திறப்பதில் எந்த சிக்கலும் இல்லை. 

ஏரியின் மொத்தக் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மேட்டூர் அணையும் கிட்டத்தட்ட நிறைந்து தளும்புகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் கொள்ளிடத்தில் திருப்பி விட்டு, அந்த நீர் கீழணைக்கு வருவதை உறுதி செய்தால், அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீரைக் கொண்டு அதிக அளவாக ஒரு வாரத்தில் வீராணம் ஏரியை நிரப்பி விட முடியும்.

வடகிழக்கு பருவமழை தொடங்கும் வரை பாசனத்திற்கு திறக்க அந்த தண்ணீர் போதுமானது. தேவைக்கு அதிகமாக தண்ணீர் இருந்தும் பாசனத்திற்கு திறக்க மறுப்பது அநீதியாகும். கடலூர் மாவட்ட பாசனத்தைக் கருத்தில் கொண்டு, வீராணம் ஏரியிலிருந்து உடனடியாக தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். 

அப்பகுதி விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், நுண்ணூட்டச் சத்து உள்ளிட்ட இடு பொருட்களையும், பயிர்க்கடனையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Anbumani Ramadoss Condemn to TNGovt Cuddalore Farmers issue Viranam lake


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->