தேவதைகளான செவிலியர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் - பாமக தலைவர் அன்புமணி.!
pmk leader anbumani ramadoss nurses day wishes
இன்று உலகம் முழுவதும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
"என் கடன் மனித உயிர்களைக் காப்பதே என்று உறுதியேற்று இரவு, பகல் பாராமல் நோயர்களுக்கு சேவை செய்யும் உன்னத தேவதைகளான செவிலியர்கள் அனைவருக்கும் உலக செவிலியர் நாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஈடு இணையற்ற சேவை என்றால் அது செவிலியர் பணி தான்.
ஆனால், அதற்கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்தக் குறையை போக்கும் நோக்குடன் தான் நடப்பாண்டுக்கான உலக செவிலியர் நாளை நமது செவிலியர்கள், நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி என்ற தலைப்பில் கொண்டாட உலக செவிலியர்கள் கவுன்சில் தீர்மானித்துள்ளது.
அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் செவிலியர்கள் அனுபவித்து வரும் குறைகளைக் களைந்து கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
pmk leader anbumani ramadoss nurses day wishes