புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மகளிர் தின வாழ்த்து!
Puducherry Lieutenant Governor and leaders of political parties greet women on Women Day
பெண்கள் உரிமையும் அதிகாரமும் சமூகப் பாதுகாப்பும் பெற்று வாழ வேண்டும் என்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:பெண்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சமுதாயம் முற்போக்கான - ஆரோக்கியமான சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் அங்கே பெண்கள் உரிமையும் அதிகாரமும் சமூகப் பாதுகாப்பும் பெற்று வாழ வேண்டும். எத்தனை சட்டங்கள் - திட்டங்களுக்கு பிறகும் சமுதாயத்தில், பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் இன்னும் தொடர்ந்து வருகிறது.
பெண்களுக்கு மதிப்பளித்து, சமஉரிமை அளிக்கும் சமத்துவ மனநிலை சமுதாயத்தில் ஏற்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி சமுதாய மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும் என்பதை இந்த நாள் வலியுறுத்துகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்கான தடைகளை உடைத்து அவர்களுக்கான உரிமைகளை வென்று எடுப்பதில், பாதுகாப்பான வாழ்க்கை சூழலை உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை, வளமான புதுச்சேரியை உருவாக்க உறுதி ஏற்போம் என துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.

இதேபோல புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரும்,எம்.பியுமான வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள மகளிர் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது:பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல் ஆகிய செயல்களை துரிதப்படுத்துவது 2025ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தின கருப்பொருள் ஆகும். புதுச்சேரியில் மகளிர்தான் அதிக வாக்காளர்களாக உள்ளனர். அவர்களே தேர்தலில் ஒருவரின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றனர். அந்தவகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் எனது வெற்றியை நிர்ணயித்த புதுச்சேரி மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர் தினத்தில் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
பெண்கள் உரிமை, சமத்துவம், அதிகாரம் பெற வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு செயலில் காட்டுகின்றனரா? என்பதை புதுச்சேரி மகளிர் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இந்த அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த ஒரே ஒரு பெண்ணிடம் இருந்தும் உரிமையை, அதிகாரத்தை, சமத்துவத்தை பறித்துவிட்டனர். இதனை கூட்டணியில் உள்ள பாஜகவும் தட்டி கேட்கவில்லை. இதுதான் இந்த ஆட்சியாளர்கள் பேசும் பெண்களின் உரிமை, சமத்துவம், அதிகாரம்.
பெண்கள் சம்பாதிக்கும் பணத்தில் 90 சதவீதத்தை தங்கள் குடும்பத்திற்கே செலவிடுகின்றனர். அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் பசியால் வாடுவதில்லை. கல்வியில் பின்தங்குவதில்லை. குடும்பங்கள் முன்னேறினால்தான் நாடு முன்னேறும். எனவே பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறவும், இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தின கருப்பொருள்படி புதுச்சேரி மகளிருக்கான உரிமைகள், சமத்துவம், அதிகாரம் அளித்தல் ஆகிய செயல்கள் துரிதமாக நடைபெறவும் அனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்கிறேன் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரும்,எம்.பியுமான வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
English Summary
Puducherry Lieutenant Governor and leaders of political parties greet women on Women Day