ட்ரோன் மூலம் மறு நில அளவை செய்யும் பணி... முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.!
Re-survey by drone... Chief Minister Rangasamy inaugurated the event.
புதுச்சேரி முழுவதும் நவீன முறையில் ட்ரோன் மூலம் மறு நில அளவை செய்யும் பணியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் வழிமுறைகள்:-
முதற்கட்டமாக முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் ஆளில்லா வானூர்தியை பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் (Ortho Rectified Image - ORI) உருவாக்கப்படும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வொளிப்படத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட புலன்களில் வருவாய் மற்றும் நகராட்சி நிர்வாக துறைகளின் பணியாளர்கள் அடங்கிய குழுக்களால் நில அளவை மேற்கொள்ளப்படும்.
நவீன நில அளவை கருவிகளைக் கொண்டு (DGPS மற்றும் ETS) நில அளவை செய்து புலவரைபடம் தயார் செய்யப்படும். நில அளவை செய்து தயார் செய்யப்பட்ட வரைபடத்தில் ஏதேனும் ஆட்சேபணைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட நில உரிமைதாரர்கள் உரிய அலுவலர்களிடம் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். அவை விதிகளின்படி பரிசீலித்து தீர்வு காணப்படும். இதன் தொடர்ச்சியாக இறுதி செய்யப்பட்ட நகர்புற நிலை ஆவணங்கள் வெளியிடப்படும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பின்னர் புவி அமைவிட புள்ளிகளுடன் கூடிய புல வரைபடங்களும், சொத்துவரி தொடர்பான தரவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட நில ஆவணங்கள் நில உரிமைதாரர்களுக்கு வழங்கப்படும்.
இத்திட்டத்தின் பயனாக அனைத்து தனியார் நிலங்களுக்கும் பட்டா தற்பொழுது உள்ள தகுதியான நில உரிமையாளரின் பெயரில் மாற்றப்படும். எனவே இந்த நில மறு அளவை திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்த அரசு அலுவலர்களுக்கு ஒத்துழைப்பனை நல்குமாறு புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட முருங்கப்பக்கம் வருவாய் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் நில உடைமைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
English Summary
Re-survey by drone... Chief Minister Rangasamy inaugurated the event.