‘ஜெய்பீம்’ திரைப்படம் கண்டு கண்ணீர் சிந்தியதாகக் கூறிய முதலமைச்சர் ஐயா ஸ்டாலின்அவர்களே - சீமான் - Seithipunal
Seithipunal


விசாரணையின்போது உயிரிழந்த பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிந்து உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களைச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போதே அவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக் காலத்தில் அடுத்தடுத்து தொடரும் விசாரணை மரணங்களைக் கைகட்டி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கொடுங்கோன்மை போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அருகேயுள்ள தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அவர்களை சாராய விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி விசாரிப்பதற்காகக் காவல்துறையினர் கடந்த 26 ஆம் தேதி காலையில் அழைத்துச் சென்ற நிலையில், 27 ஆம் தேதி மாலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருப்பது அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

எவ்வித உடல் நோய்களும் இல்லாத 48 வயதேயான தங்கமணியின், இறந்த உடம்பில் காயங்கள் இருந்துள்ளதும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற மறுநாளே உயிரிழந்திருப்பதும் காவல்துறையினரின் கண்மூடித்தனமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், 2 இலட்சம் ரூபாய்க் கொடுத்தால் தங்கமணியை விடுவிப்பதாகக் காவல்துறையினர் தங்களிடம் பேரம் பேசியதாகத் தங்கமணி அவர்களின் மகன் தினகரன் குற்றஞ்சாட்டியிருப்பதும் காவல்துறையினர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இருளர், குறவர் உள்ளிட்ட பழங்குடியின சமூகத்தினர் மீது அவ்வப்போது பொய் வழக்குகள் புனைந்து சிறைப்படுத்துவதென்பது கணக்கு காண்பிப்பதற்காக காலங்காலமாகத் தொடர்ந்து வரும் கொடுமையான நடைமுறை என தமிழ்நாடு காவல்துறையினர் மீது நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்வுகளை மையப்படுத்தி திரையில் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் வெளியானபோது அதனைச் சிறப்புத் திரையில் கண்டு கண்ணீர் சிந்தியதாகக் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள், கண்ணுக்குமுன் தமது ஆட்சிக்காலத்தில் அடுத்தடுத்து நடக்கும் காவல் நிலைய விசாரணை மரணங்கள் குறித்து இதுவரை வாய்த் திறவாமல் அமைதிகாப்பது ஏன்? திமுக ஆட்சிக்கு வந்த கடந்த ஓராண்டுக் காலத்தில் மட்டும் இதுவரை விசாரணை சிறைவாசிகள் 8 பேர் தமிழகக் காவல் நிலையங்களிலும், சிறைச்சாலைகளிலும் மரணமடைந்துள்ளனர்.

இம்மரணங்கள் குறித்து நேர்மையாக விசாரிக்க உத்தரவிட்டிருக்க வேண்டிய திமுக அரசு, ஒவ்வொரு முறையும் அதனை மூடி மறைப்பதிலேயே முனைப்புக்காட்டி வருகிறது. திமுக அரசின் இத்தகைய தொடர் அலட்சியப்போக்கே தற்போது மேலும் ஒரு உயிர் பலியாக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. உயிரிழந்த தங்கமணி அவர்களின் உடற்கூராய்வு சான்றிதழ் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருப்பதை மற்றுமொரு கண்துடைப்பு நாடகமாகவே கருத வேண்டியுள்ளது. மரணமடைந்து இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உடற்கூராய்வு சான்றிதழ் அரசுக்குக் கிடைக்கவில்லை என்பது ஏற்க முடியாததாக உள்ளது.

ஆகவே, திமுக அரசு தங்கமணி அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவல்துறையினர் மீது உடனடியாகக் கொலை வழக்குப் பதிவு செய்வதோடு, தலையீடு இல்லாத நியாயமான விசாரணை நடைபெற வழக்கினை மத்திய குற்றப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற பரிந்துரைக்க வேண்டும். மேலும், உயிரிழந்த தங்கமணி அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் துயர்துடைப்பு உதவி வழங்க வேண்டுமென்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இதுபோன்ற விசாரணை மரணங்கள் நடைபெறாமல் தடுக்கக் காவல்துறையைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்"

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman say about thankamani lock up death issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->