தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்து! நடிகை கஸ்தூரிக்கு நவ.29-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
Slanderous comments about Telugu people Court custody of actress Kasthuri till November 29
தெலுங்கு மக்களை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் நடிகை கஸ்தூரி, நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னை எழும்பூர் பகுதியில் நவம்பர் 3-ஆம் தேதி, இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி பேசினார். அப்போது, தெலுங்கு மக்களை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மற்றும் நாயுடு மகாஜன சங்கம் அமைப்புகள் எழும்பூர் மற்றும் மதுரையில் காவல் நிலையங்களில் புகார் அளித்தன. இதனால், காவல்துறை கஸ்தூரி மீது பல்வேறு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
கஸ்தூரி தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில், சென்னை தனிப்படை போலீசார் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பப்பலக்குடா பகுதியில் உள்ள ஒரு தயாரிப்பாளரின் வீட்டில் கஸ்தூரியை கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைதான கஸ்தூரி, சாலை மார்க்கமாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி ரகுபதி ராஜா, வரும் நவம்பர் 29-ஆம் தேதி வரை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் கஸ்தூரி, “நான் தனிமையில் வாழ்கிறேன். என் குழந்தை பரிதவிக்காத வகையில், ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரியதையும் நீதிபதி நிராகரித்தார்.
கஸ்தூரி, நீதிமன்றத்திற்கு வந்தபோது, “அரசியல் அராஜகம் ஒழியட்டும்; நீதி வெல்லட்டும்” என கோஷமிட்டார்.
தற்போது, கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கு மற்றும் விசாரணையின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Slanderous comments about Telugu people Court custody of actress Kasthuri till November 29