தூய்மை பணியாளர் ஓய்வூதிய வழக்கு - தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு 1 லட்சம் அபராதம்.!
supreme court one lakhs fine to tn education department for Sanitation Worker Pension Case
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் கடந்த 1992-ம் ஆண்டு தொகுப்பூதிய அடிப்படையில் அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் தூய்மைப் பணியாளராக சேர்ந்தார். அதன் பின்னர் அவரது பணி கடந்த 2002-ம் ஆண்டு நிரந்தரமாக்கப்பட்டு, கடந்த 2012-ல் ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு அவருக்கான ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அதற்கு எதிரான மறு ஆய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், "ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த மேல்முறையீட்டு மனு 156 நாட்கள் கழித்து பின்னர் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலதாமதத்துக்காக கூறப்பட்ட சட்ட கருத்து மற்றும் மொழியாக்கம் போன்ற காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
மேலும், ஓய்வூதிய பலன்கள் தொடர்பாக தூய்மைப் பணியாளரை வழக்காட செய்வது தேவையற்றது என்று நினைத்து, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையை எச்சரிக்கும் வகையில் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
இந்த அபராத தொகையை உச்சநீதிமன்ற பணியாளர் நலநிதிக்கு நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும். நீதிமன்றத்தில் காலதாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ததற்கு காரணமான அலுவலர்களிடமிருந்து இந்த அபராதத் தொகையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வசூலித்துக்கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
English Summary
supreme court one lakhs fine to tn education department for Sanitation Worker Pension Case