படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற மாத்திரைகள் - சிகரெட்டுகள் பறிமுதல் - 2 பேர் கைது..!
tablets and ciggarets seized in thoothukudi
தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரை வழியாக படகுகள் மூலம் இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் கஞ்சா உட்பட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு ஏராளமான பொருட்கள், கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் ரோந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது திரேஸ்புரம் அண்ணா காலனி அருகே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக சிலர் மூட்டைகளை படகுகளில் ஏற்றி கொண்டு இருந்தனர். அவர்களை சுற்றி வளைத்த போலீசார் படகுகளில் ஏற்றப்பட்ட மூட்டைகளை சோதனை செய்தபோது அதில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 3 லட்சத்து 15 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றை படகுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரத்தை சேர்ந்த ஜெனிஸ்டன், அன்னை தெரசா காலனியைச் சேர்ந்த அனீஸ் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வேறு ஏதேனும் கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா என்று நள்ளிரவில் கடற்கரை முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தூத்துக்குடி இனிகோ நகர் பகுதி கடற்கரையில் 4 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கிடந்தது தெரியவந்தது. அவற்றை கைப்பற்றிய போலீசார் அதனை சுங்கத்துறை வசம் ஒப்படைக்க உள்ளனர்.
English Summary
tablets and ciggarets seized in thoothukudi