#BREAKING :: சேது சமுத்திர திட்டத்திற்கு தமிழக பாஜக ஆதரவு..!!
Tamil Nadu BJP supports Setu Samudra project
சேது சமுத்திர திட்டம் கடந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு சேது சமுத்திரத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்தை தற்போதைய பாஜக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இந்த நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அப்பொழுது பேசிய அவர் "அரசியல் காரணங்களுக்காக சேது சமுத்திர திட்டத்திற்கு பாஜக முட்டுக்கட்டை போட்டுள்ளது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படாததற்கான அரசியல் காரணங்களை சொல்ல விரும்பவில்லை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்திற்கான மாற்றுப் பாதை கண்டறிந்தும் மத்திய பாஜக அரசு நிறைவேற்ற வில்லை" என குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையின் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் கொண்டு வந்த சேது சமுத்திர திட்டத்திற்கான தனி தீர்மானத்தின் மீது சட்டப்பேரவையில் பேசினார். அப்பொழுது பேசிய அவர் "இந்துக்கள் கடவுளாக வழிபடும் ராமர் காலத்தில் பாலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இது குறித்தான விரிவான அறிக்கை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ராமர் பாலத்திற்கு சேதம் அடையாத வகையில் சேது சமுத்திர கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு. எனவே தமிழக அரசு கொண்டு வந்த சேது சமுத்திர கால்வாய் திட்டம் தொடர்பான தீர்மானத்தை தமிழக பாஜக ஆதரிக்கிறது" என நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
English Summary
Tamil Nadu BJP supports Setu Samudra project