இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் ஒன் - தமிழக அரசு பெருமிதம்! - Seithipunal
Seithipunal


கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், ₹100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாகவும், நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில், நாட்டிலேயே அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் நெல், அரிசி உட்பட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு நிலவரங்களை எப்போதும் சீராக நிர்வகித்திட உதவும் வகையில் வெளிச் சந்தை வர்த்தகம் உட்பட அனைத்து வர்த்தக நடவடிக்கைளையும் மேற்கொள்வதற்காக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 1956ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டத்தின்படி 23.2.1972 அன்று நிறுவப்பட்டது.

தமிழ்நாட்டு மக்களுக்குக் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியது உட்படப் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ள புதிய திட்டங்களால் தமிழ்நாட்டிலிருந்து வறுமை முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் பசிப்பிணி ஒழிந்து வளமான வாழ்வில் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கைகள் வாயிலாக வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

கடந்த 40 மாதங்களில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள முக்கியப் பணிகள் விவரம் :

உணவு பொருள் வழங்கல் துறை குறை தீர்ப்புப் பணிகள்

மாதாந்திர பொது விநியோகத்திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம்கள் நடத்தப்பட்டு நகல் அட்டை, புதிய குடும்ப அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல். உள்ளிட்ட 1 இலட்சத்து 83 ஆயிரத்து 610 கோரிக்கைகள் பெறப்பட்டு அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பொது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நிவாரணத் தொகையாக ரூ.4,000/- வீதம் 2 கோடியே 8 இலட்சத்து 14 ஆயிரத்து 528 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நியாய விலைக் கடைகளின் மூலம் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு 2 கோடியே 7 இலட்சத்து 70 ஆயிரத்து 726 அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அத்தியாவசியப் பொருள்களைத் தகுதியான பயனாளிகளுக்கு அளிக்கும் பொருட்டு கைவிரல் ரேகை பதிவு முறை ஏற்படுத்தப்பட்டு, ஆதார் எண்கள் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரைப்படி, ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. 31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள்

திராவிட மாடல் அரசு விவசாயிகளின் நலன் கருதி, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குப் படிப்படியாகக் கட்டடங்களைக் கட்டி வருகிறது. 40 மாதங்களில் 230 நெல் கொள்முதல் நிலையக் கட்டடங்கள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு, இதுவரை 130 நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு எஞ்சியவற்றின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்டு, கொள்முதல் செய்யப்படும் ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது என்ற கருணை மனதோடு 358.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 259 மேற்கூரை அமைப்புடன்கூடிய நெல் சேமிப்புத் தளங்களை நிறுவ ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, 213 நெல் சேமிப்புத் தளங்கள் கட்டப்பட்டு எஞ்சியவை கட்டப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு

புதுடெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புப் கிடங்குகளைப் பதிவு செய்ததற்காகத் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு முதல் பரிசு வழங்கிப் பாராட்டியுள்ளது.

இப்படி ஒவ்வொரு துறையிலும் பாராட்டுகளைப் பெற்றுவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, உணவுத் துறையில் தன்னிறைவு அடைவதற்காகப் புதிய பல திட்டங்கள் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திச் சாதனைகள் நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Government Ration Shop 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->