டாஸ்மாக் கடைகளில் நான்கு புதிய பீர்! கோடை வெப்பத்தை தணிக்க ஏற்பாடு!
TASMAC New Beer
ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் தமிழக அரசின் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனையில் 12 சதவிகிதம் குறைவாக பதிவாகியதைத் தொடர்ந்து, விற்பனை உயர்த்தும் நோக்கில் டாஸ்மாக் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 10.88 லட்சம் பீர் பெட்டிகள் விற்பனையாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் அது 7.97 லட்சமாக மட்டும் குறைந்தது. இதனை மீட்டெடுக்க புதிய வகை பீர்களைச் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டாஸ்மாக் கடைகளில் நான்கு புதிய பீர் வகைகள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இதன் மூலம், பீர் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தேர்வு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இவற்றில், ஆந்திராவைச் சேர்ந்த "பிளாக் பஸ்டர்" பீர் ஏற்கனவே அறிமுகமாகி விட்டது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரவுள்ள "பிளாக் ஃபோர்ட்" மற்றும் கோதுமை பீரான "வூட்பெக்கர்" ஆகியவை விரைவில் அறிமுகமாக உள்ளன. இந்த மூன்றும் டாஸ்மாக் மூலம் விற்பனைக்குத் தயாராகின்றன.
இந்த புதிய வகை பீர்களுடன் தேவையான அளவில் பீர் கையிருப்பில் இருக்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.