ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்: நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் - சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு!
Temple Festival Aadal Paadal Chennai HC Order
தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது கிராமத்தில் உள்ள வெங்கடேசப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 11 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க காவல்துறை மறுத்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், அகரத்தில் உள்ள ஸ்ரீ நல்ல கூந்தல் அழகிய அம்மன் கோயில் திருவிழாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி கணேசமூர்த்தி என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், “2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகத்தில் ஆடல், பாடல் நிகழ்வுகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கலாம். நிகழ்ச்சிக்காக தலா ரூ.10,000 பாதுகாப்பு செலவாக மனுதாரர்கள் செலுத்த வேண்டும்.
நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், சாதி, மதம், அரசியல் சார்ந்த பேச்சுகள் மற்றும் உள்ளக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.
நிபந்தனைகளை மீறினால், சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் கீழ் காவல்துறை எதிர்கொள்ளலாம். மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நிகழ்ச்சி நடத்த அனுமதி இல்லை,” என்று உத்தரவிட்டது.
English Summary
Temple Festival Aadal Paadal Chennai HC Order