முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்கு உதவாத காகிதப்பூ.. எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கருத்து! - Seithipunal
Seithipunal


முதல்வர் ரங்கசாமி 2தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மக்களுக்கு உதவாத காகிதப்பூ என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா கருத்து தெரிவித்துள்ளார்.

15–வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று 2025–26–ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் 2025–26–ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: –முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமானம் இல்லாமல், ஒன்றிய அரசின் சிறப்பு நிதி ஏதும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலை முன்வைத்து அறிவிப்புகள் செய்திருக்கிறார்கள். புதுச்சேரியின் வருவாய், செலவினங்கள், கடன் வாங்க முடியாத நிலை ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்கள். அதில் மக்கள் எதிர்பார்த்த திட்டங்கள் ஏதும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. புதிய தொழில்கொள்கை, வணிகர்களுக்கு சலுகைகள், ஐடி பார்க், புதிய சுற்றுலாத் திட்டங்கள் ஏதும் இல்லை. இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி இருக்கிறார். 

புதுச்சேரி மக்கள் எதிர்பார்க்கின்ற வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், துறைமுகம் மூலம் அரசுக்கு நேரடி வருமானம், மின்துறையை தனியாருக்கு மாற்றும் முடிவை கைவிடுதல், வேலையிழந்துள்ளவர்களுக்கு வேலை, மாநில அந்தஸ்து போன்ற எந்த உறுதியையும் பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை. புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு உதவாத காகிதப் பூ பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார். 

மகளிர் உரிமைத் தொகை ரூ. ஆயிரம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களுக்கு மாதம் மாதம் கொடுக்க தவறிய இந்த அரசு தற்பொழுது ரூ. 2.500 தரப்போவதாக அறிவித்துள்ளது. மக்களுக்கு அது முழுமையாக கிடைத்தால் மகிழ்ச்சி. டெல்லியை பின்பற்றி புதுச்சேரியில் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் மாநில வருவாயை பெருக்க பல வழிகள் உள்ளன. அதிலும் அவர் சொல்லிய திட்டங்கள் அனைத்தும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற புள்ளி விபரம் கொடுக்கப்படவில்லை.

2022–ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ரூ. 34 கோடிக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டத்திற்கு தற்போது வெறும் ரூ. 10 கோடி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே ஏன் என்ற கேள்விக்கு, ஈசிஆரில் லதா ஸ்டீல் நிறுவனத்திற்கு அருகில் 16 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம், நவீன மீன் அங்காடி உள்ளிட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் ஒரு பகுதியில் மட்டும் மீன் அங்காடி திறக்கப்பட்டுள்ளது. மீதி திட்டம் என்னவானது என்று தெரியவில்லை. 

கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆயுஷ்மான் இன்சூரன்ஸ் திட்டம் தோல்வி அடைந்ததாக முதல்வரே தெரிவித்தார். அதற்கு மாற்றாக புதுச்சேரி அரசு அனைவருக்கும் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் என்றார். ஆனால் இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 

மாநில அந்தஸ்து கேட்டு 15 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்றியத்தில் ஆளுகின்றவர்கள் புதுச்சேரி மக்களின் கருத்தை, ஜனநாயக உரிமையை, சட்டமன்ற பிரதிநிதிகளின் உரிமையை உதாசீனப்படுத்தி வருகின்றனர். . சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 1996–ஆம் ஆண்டு தமிழகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்ததை அடிப்படையாக கொண்டு, அப்போதைய முதல்வர் ஆர்.வீ. ஜானகிராமன் அத்திட்டத்தை இங்கு கொண்டு வந்தார். அப்போது ரூ. 10 லட்சம் ஆண்டுக்கு வழங்கப்பட்டது. அப்போது அது பெரிய பணமாக இருந்தது. இன்று ரூ. 2 கோடி அளிக்கப்படுகிறது. அந்த பணத்தில் எந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என்று எண்ணிப் பாருங்கள். 

ஆண்டுதோறும் கொடுக்க வேண்டிய தொகுதி மேம்பாட்டு நிதியை பாக்கி இல்லாமல் கொடுத்தாலே போதும். இதில் தற்போது ரூ. 3 கோடி தருவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அது முழுமையாக ஆண்டு தொடக்கத்தில் 
கொடுத்தால் வரவேற்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச். நாஜிம், வி. அனிபால் கென்னடி, இரா. செந்தில்குமார், எல். சம்பத், நாக. தியாகராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The budget presented by the Chief Minister is a paper flower that does not help the people Leader of the Opposition R Sivas comment


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->