தூத்துக்குடியில் பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு! அதிரவைக்கும் பின்னணி!
Thoothukudi School Student Attacked
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தங்க கணேஷின் மகன் தேவேந்திரன் (வயது 17) நெல்லை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்லும் நோக்கில் அவர் ஊரிலுள்ள பஸ்நிலையத்தில் இருந்து பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் நோக்கி பயணித்தார்.
பஸ், அரியநாயகிபுரத்திற்கு அடுத்துள்ள கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது, மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் பஸ்சை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்கள் பஸ்சுக்குள் புகுந்து தேவேந்திரனை வெளியே இழுத்து வீழ்த்தினர். அதன்பின், அவர்கள் தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலில் தேவேந்திரன் தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்தார். பஸ்சிலிருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்த தேவேந்திரனை ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையில், கபடி போட்டியில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
English Summary
Thoothukudi School Student Attacked