தமிழகத்தின் பல துறைகளின் வளர்ச்சிக்கு காரணமான வட மாநில தொழிலார்களுக்கு தமிழக அரசு பாதுகாவலாக உள்ளது - திமுக அமைச்சர் அறிக்கை! - Seithipunal
Seithipunal


"தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் யாருக்கும், எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்" என்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக பீகார் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காவல்துறை இரண்டாவது நாளாக ஹிந்தியில் விளக்கமளித்து டிவிட் செய்து வருகிறது. இந்நிலையில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், "பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்து அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.

அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். 

அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன, அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பது தான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. 

விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.

தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள்" என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Minister Say About North Indian workers safety


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->