புழல் சிறையில் இருந்து தப்பிய பெண் கைதி கைது - இரண்டு பெண் காவலர்கள் இடைநீக்கம்.!
two woman police officer suspend in puzhal jail for accuest escap issue
சென்னையில் உள்ள பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி. பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய இவரை கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி போலீஸார் திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், இவரை கடந்த 13ம் தேதி காலை சிறையில் உள்ள பார்வையாளர்கள் அறையை சுத்தம் செய்வதற்காக காவலர்கள் கனகலட்சுமி மற்றும் கோகிலா உள்ளிட்டோர் அழைத்துச் சென்றனர். அப்போது அறையை சுத்தம் செய்து கொண்டிருந்த கைதி ஜெயந்தி திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் சிறைக்காவலர்கள் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறைத்துறை கண்காணிப்பாளர், பெண் காவலர்களிடம் விசாரணை நடத்தியதுடன் கைதி ஜெயந்தி தப்பிச் சென்றது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் படி புழல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கைதி ஜெயந்தியை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி பெண் கைதி தப்பித்துச் செல்ல காரணமான பெண் சிறை வார்டன்கள் கனகலட்சுமி, கோகிலா ஆகியோரை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து புழல் போலீஸார் தப்பியோடிய கைதி ஜெயந்தியின் கணவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெங்களூரு கெங்கேரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
உடனே, தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந்து சென்று ஜெயந்தியை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அதில், ஜெயந்தி சம்பவத்தன்று சிறையில் இருந்து பார்வையாளர்கள் போல் தப்பித்துச் சென்று அங்கிருந்து ஆட்டோவில் கோயம்பேடு சென்றதும் பின்னர் கோயம்பேட்டில் இருந்து பேருந்தில் பெங்களூரு சென்றதும் தெரியவந்தது.
English Summary
two woman police officer suspend in puzhal jail for accuest escap issue