இந்து ராஷ்டிர - ஒரே நாடு ஒரே தேர்தல்! பாஜகவின் மாஸ்டர் பிளான் - வைகோ கண்டனம்!
vaiko condemn to one nation one election
இந்து ராஷ்டிர இலக்கை அடைவதற்காகவே, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஆளுமை பாஜக அரசு கொண்டுவர துடிப்பதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "2014-இல் இருந்தே பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில், ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை முன்வைத்து வருகிறது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களை 2017-ஆம் ஆண்டு நிதி ஆயோக் வகுத்துக் கொடுத்தது.
2018-ஆம் ஆண்டு சட்ட ஆணையம் இந்த ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது.
இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதியன்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா “ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது நல்ல பரிந்துரை. ஆனால் இதற்கு அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது” எனக் கூறி, பா.ஜ.க செயல் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தயார் என்று பச்சைக் கொடி காட்டினார்.
தலைமை தேர்தல் ஆணையாளர் கூறியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து ஒரே நாடு- ஒரே தேர்தல் முறையை செயல்படுத்த தொடக்கமாக, செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
இந்தச் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் -பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும்" என்று வைகோ தெரிவித்துள்ளார்.
English Summary
vaiko condemn to one nation one election