பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிராகவே பார்க்கிறோம் - விசிக தலைவர்.!
vck leader speech about periyar and vengaivayal issue
அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர் எதிர் துருவங்களில் நிறுத்துவது வேடிக்கையாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:-
"வேங்கைவயல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றமளிக்கிறது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்ததால் வேறு நம்பிக்கையின்றி சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்கிறோம். அதிகாரிகள் மத்தியில் பட்டியலினத்தவர்களுக்கு எதிரான மனநிலை இருக்கிறது.
தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக சொன்னதை வரவேற்றேன். ஆனால் தற்போதைய நிலை குறித்து அவர் எதுவும் கருத்து சொன்னதாக தெரியவில்லை. சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என்று சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம்.
சனாதன எதிர்ப்பில் அம்பேத்கரோடு பெரியார் கைகோர்த்து நின்றார். அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர் எதிர் துருவங்களில் நிறுத்துவது வேடிக்கையாக உள்ளது. அவர்களை பின்பற்றுவோர் இடையே வேறுபாடு ஏற்படுத்தும் முயற்சி எடுபடாது.
பெரியாருக்கு எதிரான விமர்சனத்தை அம்பேத்கருக்கு எதிரான விமர்சனமாகவே பார்க்கிறோம். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் போக்கு தமிழக மக்களின் நலனுக்கு நேரெதிராக இருப்பது கவலையளிக்கிறது. அவரை பின்பற்றுவோர் இந்த விவகாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்" என்றது தெரிவித்தார்.
English Summary
vck leader speech about periyar and vengaivayal issue