செவிலியர் கல்லூரி முதல்வர் மீது அவதூறு பரப்புவதன் உள்நோக்கம் என்ன?மாணவர்கள் கூட்டமைப்பு கண்டனம்!
What is the motive behind defaming the principal of the nursing college?
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் .சீ.சு.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்தியில்..புதுச்சேரி ஆளுநர், முதல்வர் கலந்து கொண்ட ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் அறிமுக நிகழ்ச்சியில் தனது கல்லூரி மாணவர்களுடன் பங்கெடுத்து சிறப்பித்த செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் மீது அவதூறு பரப்புவதன் உள்நோக்கம் என்ன? புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில சுகாதார ஆணையத்தால், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை இணைந்து ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரியின் 70 வயதுக்கு மேல் உள்ள சீனியர் சிட்டிசன் காப்பீடு திட்ட விழா நடத்தப்பட்டது. இவ்விழாவிற்கு மருத்துவர் அனந்தலஷ்மி தலைமை ஏற்று அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
அரசு மருத்துவ நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் விழா நடத்த செவிலியர் கல்லூரி அரங்கத்தில் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழா தொடர்பாக கலந்து கொள்ள வேண்டிய முக்கியமானவர்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள். ஆனால் நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தியவர்கள் விழா தொடர்பாக ஒரு அரசு மருத்துவருக்கும் முறையான அழைப்பிதழ் வழங்கவில்லை. இதனால் இந்நிகழ்ச்சியில் எந்த அரசு மருத்துவர்களும் பேராசிரியர்களும் மருத்துவ மாணவர்களும் கலந்து கொள்ளவில்லை. மேலும் இந்நிகழ்ச்சியில் முறையான அழைப்பு இல்லை என்றாலும் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதாலும் தங்களது கல்லூரி வளாகத்திற்குள் நடந்த விழா என்பதாலும் அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் தனது கல்லூரி மாணவர்களுடன் கலந்து கொண்டுள்ளார். இதனை இந்நிகழ்வில் பங்கெடுத்த துறை இயக்குனர், முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட விழாவில் பங்கெடுத்த அனைவரும் அறிவார்கள்.
இந்நிலையில் சில செய்திதாள்களில் செவிலியர் கல்லூரி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் மீது அவதூறு பரப்பும் விதமாக செய்தி வெளியானது. இச்செய்தி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் திட்டமிட்டு தன்மீதுள்ள பழியை துடைத்துக்கொள்ள செவிலியர் கல்லூரி முதல்வர் மீது திணித்துள்ளதாக அறிகிறோம். இந்த செய்தி செவிலியர் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்களின் கல்வியும், வெளிப்புற நோயாளிகளின் சிகிச்சை நேரமும், பேராசிரியர்களின் பாட நேரமும் பாதிக்கப்படும் வகையிலும், மருத்துவர்களுக்கு உரிய அழைப்பும் தராமல் விழா ஏற்பாடு செய்து ஆளுநர் , முதல்வர் பங்கெடுத்த நிகழ்ச்சியை சிறுமை படுத்தியவர்களை கண்டிக்க வேண்டிய தலைவர்கள் மாறாக, காப்பீடு திட்ட நன்மைகள் குறித்து தனது செவிலியர் மாணவர்களும் புரிதல் ஏற்பட மாணவர்களுடன் கலந்து கொண்ட செவிலிய முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் மீது அவதூறு பரப்பி யாரை காப்பாற்ற இத்தகைய வதந்தி என எமது அமைப்பு கேள்வி எழுப்புகிறது. அடித்தட்டுச் சேர்ந்தவர்கள் அதிகாரத்திற்கு வரும்போது அவர்கள் மீது இப்படி அவதூறுகளை பரப்பி அடக்கி விடலாம் என நினைப்பது கண்டனத்திற்குரியது
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் செவிலியர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், ஆண்டுக்கு நூறு மாணவர்களுடன் செவிலியர் படிப்பு மேற்கொள்கிறார்கள். இரண்டு ஆண்டுகளாக 100% தேர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட AMN படித்தவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு சுகாதார மையங்களில் பணியில் அமர்ந்துள்ளார்கள் என்றால் அதற்கு மிக முக்கிய காரணமானவர் முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் என்பதை எமது அமைப்பு நன்கு அறியும், அத்தகைய பணி நியமனத்திற்காக எமது அமைப்பு அவரோடு இணைந்து பணியாற்றியுள்ளோம். இவ்வாறு எந்தநேரமும் மாணவர்கள் வளர்ச்சி மாணவர்களின் மறுவாழ்வை சிந்தித்து செயல்படும் கல்லூரியின் முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் அவர்கள் மீது யாரோ ஒருசிலரின் அதிகார போதையில் அவதூறுகளை கணமூடித்தனமாக பரப்புவதை எமது அமைப்பு வேடிக்கை பார்க்காது என எமது அமைப்பு சார்பில் தோழமையோடு கண்டனத்தை பதிவு செய்கிறோம். புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் .சீ.சு.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
English Summary
What is the motive behind defaming the principal of the nursing college?