கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய வாலிபர் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!
youth arrested for fake money in chennai
கள்ளநோட்டு கொடுத்து காய்கறி வாங்கிய வாலிபர் - கையும் களவுமாக சிக்கிய சம்பவம்.!
சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் மணி. இவர் வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் எதிரில் காய்கறி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் மணி நேற்று மாலை வழக்கம்போல் காய்கறி கடையிலிருந்த போது, அங்கு வந்த ஒருவர் காய்கறி வாங்கிவிட்டு, நான்கு 500 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துள்ளார்.
அதனை மணி வாங்கி பார்த்ததில் அது கள்ளநோட்டு என்பது போன்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில், போலீஸார் கடைக்கு சென்று விசாரித்தபோது, அந்த நபர் கொடுத்த பணம் கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அதில், அந்த நபர் பள்ளிக்கரணை பாலாஜி நகரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை என்பதும், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது நண்பரும், வழக்கறிஞருமான சுப்ரமணியன் என்பதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் சேர்ந்து விருகம்பாக்கத்தில் பிரிண்டிங் மற்றும் கட்டிங் இயந்திரங்களை வைத்து 500 ரூபாய் கள்ள நோட்டுகளை தயாரித்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கள்ள நோட்டுகள் தயாரித்த இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.45.2 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள், பிரிண்டிங் இயந்திரம், பேப்பர் கட்டிங் இயந்திரம், பணம் எண்ணும் இயந்திரம் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற விவகாரத்தில் இன்று மூன்றாவது நபரான கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
English Summary
youth arrested for fake money in chennai