ஜில் ஜில்லு!!! ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு!!! - வானிலை ஆய்வு மையம்
Chance moderate rain thunder one or two places Meteorological Department
தமிழகத்தில் வெப்பநிலை மற்றும் கோடை மழை குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,"தமிழகத்தில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4° செல்சியஸ் அதிகமாக இருக்கும். அதாவது 7° பாரன்ஹீட் வரை வெயில் அதிகமாக காணப்படும்.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசவும் வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 103° வரை இருக்கும்.
ஆந்திரபிரதேச கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுதல் காரணமாக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதே நேரத்தில் சில இடங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும். இதனால் மக்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.
தமிழகத்தில் நேற்று திருத்தணியில் அதிகபட்சமாக 101.4 ° வெயில் கொளுத்தியது. மதுரையில் 101.3°, ஈரோட்டில் 101.1° கொளுத்தியது.தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக வேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினா விளை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்,கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, மதுரை மாவட்டம் மேலூர் ஆகிய இடங்களில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, மதுரை மாவட்டம் பெரியபட்டி, தேன்கனி க்கோட்டை, தானியமங்கலத்தில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Chance moderate rain thunder one or two places Meteorological Department