சோமாலியா ராணுவம் அதிரடி தாக்குதல் - 19 பயங்கரவாதிகள் பலி
19 terrorists died as army attack in somalia
கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசை எதிர்த்தும், நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வண்ணம் பொது இடங்கள், புனித தலங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் சோதனை சாவடிகளின் மீது அல்-ஷபாப் அமைப்பினர் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பயங்கரவாத அமைப்பான அல்-கொய்தாவுடன் இணைந்து செயல்படும் அல்-ஷபாப் பயங்கரவாதிகள், சோமாலியா ராணுவம் மற்றும் உகாண்டா பாதுகாப்பு படையினர் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே கடந்த வாரம் அல்-ஷபாப் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உகண்டா பாதுகாப்பு படையினர் 54 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் சோமாலியாவின் லோயர் ஷபெல்லே பகுதியின் முகமது அப்துல்லா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சி தலைமையில் அப்பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலில் அல்-ஷபாப் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 19 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையில் அல்-ஷபாப் அமைப்பினருக்கு சொந்தமான வாகனங்கள், டாங்கிகள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் இந்த கூட்டு அதிரடி நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருவதாகவும், தெற்கு சோமாலியா பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேசிய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
19 terrorists died as army attack in somalia