பாகிஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி, 06 ராணுவ வீரர்களை கொன்று, 120 பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்து சென்ற பயங்கரவாதிகள்..!
Terrorists who hijacked an express train in Pakistan killed 06 soldiers and took 120 passengers hostage
120 பயணிகளுடன் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 06 பேரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள போலான் எனும் பகுதியில், பயணிகள் 400 பேருடன் சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று பலூச் விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பினர் தண்டவாளங்களை வெடிகுண்டுகள் வைத்து தகர்த்துள்ளனர். இந்த கொடூர நாச வேலைகளை தடுக்க வந்த 06 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இந்த கொடூர சம்பவத்தின் போது பயணிகளில் பலர் தப்பி ஓடியுள்ளார். எனினும், ரயிலில் இருந்த பலர் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கிக் கொண்டனர். இச்சம்பவத்திற்கு தனி பலுசிஸ்தான் நாடு கோரி பயங்கரவாத செயல்களை செய்து வரும் பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசால் பயங்கரவாத அமைப்பு என்று வகைப்படுத்தப்பட்ட பலூச் விடுதலை ராணுவம், தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த ரயில் கடத்தல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று பலூச் விடுதலை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''பலுசிஸ்தான் மாகாணத்தில் போலன் மாவட்டத்தின் மஷ்காப், தாதர் பகுதிகளுக்கு இடையே நடத்தப்பட்ட இச்சம்பவம் துல்லியமாக திட்டமிடப்பட்ட செயல்.
எங்கள் சுதந்திரப் போராட்ட வீரர்கள், ரயில் பாதையை வெடி வைத்து தகர்த்து, ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தச் செய்தனர். போராளிகள் விரைவாக ரயிலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அனைத்து பயணிகளையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். பாகிஸ்தான் ராணுவம் அதிரடியில் ஈடுபட்டால், அதற்கு தக்க முறையில் பதிலடி தருவோம்.'' என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பயங்கரவாதிகளின் பிடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
English Summary
Terrorists who hijacked an express train in Pakistan killed 06 soldiers and took 120 passengers hostage