துருக்கி ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் பலி, 51 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..!
Turkish hotel fire
துருக்கியின் ஓட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 பேர் உயிரிழந்துள்ளதோடு, 51 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்த 06 பேர் கொண்ட குழுவை துருக்கி அரசு அமைத்து உள்ளது.
துருக்கி வட மேற்கு பகுதி போலு மாகாணத்தின் கர்தல்கயா நகரில் உள்ள பொழுதுபோக்கு இடத்தில் உள்ள 12 மாடிகள் கொண்ட ஓட்டல் ஒன்றின் உணவகத்தில் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் 234 பேர் தங்கியிருந்த நிலையில், தீவிபத்தில் 66 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிலும் பயம் காரணமாக, இருவர் பயத்தில் மாடியில் இருந்து கீழே குதித்ததால் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், 51 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குறித்த தீவிபத்து ஏற்பட்ட போது சிலர் தூங்கிக் கொண்டு இருந்ததால் பலர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக கூறப்பற்றுகிறது. மேலும், ஒரு சிலர், மாடி அறைகளில் இருந்து துணி மற்றும் போர்வை மூலம் கீழே இறங்க முயற்சித்தனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். அங்கிருந்தவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தீவிபத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை என்று கூறப்படுகிறது.