முழு நேரமும் பள்ளிகளை நடத்தவும், பாடங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கவும் தமிழக அரசு உத்தரவு.!
Schools will function with full strength
பள்ளிகள் முழுநேரமும் செயல்பட்டு, பாடங்கள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று அதிகளவில் பரவ தொடங்கியதால் தமிழக அரசு, பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தது. இதனால் பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தபின், பகுதி நேரமாகவும், சுழற்சி முறையிலும் பாடங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. எனவே, பள்ளி நேரங்களில், அனைத்து பாட வேளைகளும் முழுமையாக நடத்தப்பட வேண்டும் எனவும், பாடங்கள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகள் காலை, மதியம் என இரு வேளையும் முழுமையாக செயல்பட வேண்டும் எனவும், வழக்கத்தில் உள்ள அனைத்து பாட வேளைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை முழு அளவில் நேரடியாக பள்ளிக்கு வரவழைத்து பாடங்களை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அரை நாள் மட்டும் பள்ளியை நடத்துவது, வகுப்புகள் துவங்கிய ஓரிரு மணி நேரத்தில் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்புவது உள்ளிட்ட செயல்களுக்கு அனுமதி இல்லை என்றும், அப்படி நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து பாடங்களும் குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட வேண்டும் வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
Schools will function with full strength