கும்பமேளாவில் பயங்கர தீ விபத்து; 10 குடிசைகள் எரிந்து நாசம்!
Fire breaks out at Kumbh Mela; 10 Huts Burnt Down!
உத்தரபிரதேசத்தில் நடந்துவரும் மகா கும்பமேளா முகாமில் ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.மகா கும்பமேளாவில் மீண்டும் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ந் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடந்து வருகிறது. இங்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
சமீபத்தில் மவுனி அமாவாசையை முன்னிட்டு கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்றைய தினம் திரிவேணி சங்கமத்தில் சுமார் 10 லட்சம் பேர் ஒரே நேரத்தில் புனித நீராட குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து இதில் 30 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மகா கும்பமேளாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன

இந்தநிலையில் அதிகாலை முதலே புனித நீராடும் பக்தர்கள், இரவில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கும் பந்தல்களில் தங்கி வருகிறார்கள். மேலும் இதற்காக பல்வேறு இடங்களில் பெரிய முகாம்களும் அவற்றில் ஏராளமான சிறுசிறு பந்தல் குடிசைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு நேற்று மகாகும்பமேளா நகரின் செக்டார் 18-ல் அமைந்துள்ள இஸ்கான் முகாம் பகுதியில் பந்தல் குடிசையில் திடீரென தீப்பற்றி விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த தீ மளமளவென பரவி அருகில் இருந்த 10-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்தன.
இருந்தபோதிலும் ஆரம்பத்திலேயே பக்தர்கள் சுதாரித்துக்கொண்டு குடிசைகளை விட்டு வெளியேறி மற்றவர்களையும் எச்சரிக்கை செய்ததால் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மகா கும்பமேளாவில் மீண்டும் ஏற்பட்ட இந்த தீ விபத்து பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Fire breaks out at Kumbh Mela; 10 Huts Burnt Down!