சூறாவளி புயல் எச்சரிக்கையை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!
Indian Meteorological Department issues hurricane warning
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்றைக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலைக்குள் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சூறாவளி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதால் அடுத்த வாரம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடையில் கங்கை நதியின் மேற்கு வங்க மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஒடிசாவின் கிழக்கு கரையோர பகுதி மக்களுக்கு 'சூறாவளி' புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வானிலை ஆய்வு மையத்தின் இந்த எச்சரிக்கையை அடுத்து, பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பானி சூறாவளி புயல், 2020 ஆம் ஆண்டு ஆம்பன் சூறாவளி புயல், 2021 ஆம் ஆண்டு யாஸ் ஆகிய மூன்று சூறாவளி புயல்கள் ஒடிசாவின் பகுதிகளை தாக்கி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Indian Meteorological Department issues hurricane warning