ஹேஷ்டேக்கில் மோடியை முந்திய ஸ்டாலின்; நம்பர் 01 இடத்தில், 'கெட் அவுட் ஸ்டாலின்'..!
At number 01 Get Out Stalin hashtag
திமுக மற்றும் பாஜக இடையே எக்ஸ் தளத்தில் கடும் போட்டி நிலவுகிறது. எக்ஸ் தளத்தில், தி.மு.க.,வின், 'கெட் அவுட் மோடி'க்கு போட்டியாக, தமிழக பா.ஜ., முன்னெடுத்த, 'கெட் அவுட் ஸ்டாலின்' ஹேஷ்டேக், 10 லட்சம் பதிவுகளை தாண்டி, டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
'தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான், மாநில கல்வி திட்டங்களுக்கு நிதி வழங்கப்படும்' என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.
இதனை கண்டித்து தமிழகத்தில் திமுக சார்பில் போராட்டம் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, 'பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது, 'கோ பேக் மோடி' என, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை மோடி வந்தால், 'கெட் அவுட் மோடி' என, தமிழக மக்கள் துரத்துவர்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அத்துடன், தி.மு.க.,வினர், 'எக்ஸ்' தளத்தில், 'கெட் அவுட் மோடி' என்று, 'ஹேஷ்டேக்' பதிவிட்டனர். இது, பா.ஜ.,வினரிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'நீங்கள் 'கெட் அவுட் மோடி' என பதிவிடுங்கள்; நாளை காலை நான், 06:00 மணிக்கு, என் சமூக வலைதள பக்கத்தில், 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பதிவிடப் போகிறேன். மக்கள் எதை வரவேற்கின்றனர் என பார்ப்போம்' என நேற்று முன்தினம் கூறியிருந்தார்.

அதன்படி, நேற்று காலை, 6:00 மணிக்கு, 'கெட் அவுட் ஸ்டாலின்' என, அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அத்துடன், பா.ஜ.,வினர், பலரும் 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பதிவிட்டு இருந்தனர். இதன்காரணமாக குறித்த பதிவு, காலையில் இருந்து பிற்பகல் வரை, 'எக்ஸ்' டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
இதற்கிடையில் பிற்பகலில், நடிகர் விஜயின் த.வெ.க.,வினர், 'டி.வி.கே., பார் டி.என்.,' என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
At number 01 Get Out Stalin hashtag