எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: முடங்கியது இரு அவைகளும்.. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த ஓம் பிர்லா!
Opposition parties Both Houses are paralysed Om Birla postponed without specifying date
மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர் . இதனால் தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டபோது வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் கடந்த 17ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசினார். அவர் பேசும்போது, அம்பேத்கரை பற்றி சர்ச்சையாக பேசினார் என கூறப்படுகிறது. அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது அரசியல் வட்டாரங்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. இதனால் முழக்கத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் அமைதியாக நின்று மரியாதை அளித்தனர். வந்தே மாதரம் பாடலுடன் அவை அலுவல் முடிந்தது. எதிர்க்கட்சிகள் அமளியால் அவையை அதன் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார். முன்னதாக, ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் கடிதத்தை பாஜக எம்.பி.க்கள் அவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவையும் முடங்கியது. இதனால், அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவை நண்பகல் 12 மணிக்கு மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
English Summary
Opposition parties Both Houses are paralysed Om Birla postponed without specifying date