பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் ஏமாற்றம் அளிக்கிறது: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் கவலை..!
Prime Minister Modi visit to Sri Lanka is disappointing Rameswaram Boat Fishermens Association President
பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் ஏமாற்றம் அளிக்கிறது என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு சென்றுள்ள மோடி இன்று கொழும்பு நகரில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக உடன் சந்திப்பு நடத்தினார்.
இந்த போது மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தை பற்றி வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, மீனவர் பிரச்சனையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதன் போது இலங்கை சிறையில் உள்ள 11 மீனவர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிப்பதாக ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தெரிவித்துள்ளார். அதாவது, மோடியின் இலங்கை பயணத்தின்போது சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், வெறும் 11 மீனவர்களை மட்டும் விடுவிப்பதாக இலங்கை அரசு கூறியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

மீனவர் பிரச்சனைக்கு குறித்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளித்தோம். அதற்கு, மோடியின் இலங்கை பயணத்தின்போது மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என ஒன்றிய அரசு உறுதி அளித்தது; ஆனால் அது நடக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி, உடனே வெளியுறவுத்துறை மூலம் இலங்கை அரசிடம் பேசி சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதற்குள் மீனவர்கள் விடுவிக்கப்பட்டால் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi visit to Sri Lanka is disappointing Rameswaram Boat Fishermens Association President