போராட்டத்தில் ஈடுபட்ட 3500 திமுகவினர் மீது வழக்கு! எதிர்க்கட்சிகளின் கண்டனத்தால் நடந்த நடவடிக்கை!
TN Police DMK Protest
தமிழ்நாட்டில் ஆளுனரைக் கண்டித்து திமுக சார்பில் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 3500 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறை தற்போது இந்த வழக்கை பதிவு செய்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் தேடி, இந்த வழக்குகளை பதிவு செய்துள்ளதாக காவல்துறை திறப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று போராட்டத்துக்கான அறிவிப்பு வெளியாகி இன்று திமுக போராட்டம் நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் வழங்குவதில்லை, 5 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்க வேண்டும், கூட்டம் கூடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அனுமதி மறுக்கும் போலீசார், இப்போது எப்படி திமுக போராட்டத்திற்கு அனுமதி கொடுத்துள்ளனர் என்று, பாமக, பாஜக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழக தலைவர்கள் ஒரே அணியியாக கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்த நிலையில், போலீசார் தற்போது திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.