"மகளை மறந்து.. மகனுக்கு அமைச்சர் பதவி.? துணை முதல்வராக பட்டியலிணத்தை சேர்ந்தவரை அறிவியுங்கள்." முதல்வரை சாடிய வானதி சீனிவாசன்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஏப்ரல் 3-ம் தேதி இணையதளம் மூலமாக, அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தற்போது, "இந்த மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றிய தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சமூகநீதி பற்றி பாடம் நடத்தியிருக்கிறார். `சமூகநீதியைக் காக்கும் கடமை நமக்குத்தான் இருக்கிறது. 

அதனால்தான் இணைந்திருக்கிறோம்' என்று தனது பேரூரையைத் தொடங்கிய ஸ்டாலின், `சமூகநீதி கருத்தியலை யார் எந்த நோக்கத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அதன் வெற்றியும் பலனும் இருக்கும்' எனப் பேசியிருக்கிறார். தி.மு.க தலைவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் இருந்த அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, 1969-ல் முதலமைச்சராகவும், பிறகு தி.மு.க தலைவராகவும் ஆனவர் கருணாநிதி. 2018-ல் கருணாநிதி மறையும் வரை, அரை நூற்றாண்டுக்காலம் அவர்தான் தி.மு.க தலைவர். 

49 ஆண்டுகளும் தி.மு.க தலைவர் பதவிக்கு வேறு ஒருவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டதே இல்லை. மகன் ஸ்டாலினுக்குப் போட்டியிட வந்துவிட்டாரே என்பதால்தான், வைகோவும் தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். தந்தை கருணாநிதி மறைவுக்குப் பிறகு மகன் ஸ்டாலின் தி.மு.க தலைவராகிவிட்டார். அரை நூற்றாண்டு கடந்தும் அந்தப் பதவிக்கு பெயரளவில்கூட வேறொருவர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 2019 லோக் சபா தேர்தலுக்குப் பிறகு மகன் உதயநிதியை, திடீரென தி.மு.க-வின் இளைஞரணி தலைவராக்கி, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வைத்து, இப்போது அமைச்சராகவும் ஆக்கிவிட்டார். 

உதயநிதிக்கு மட்டுமல்ல, அவர் மகன் இன்பநிதிக்கும் துணையாக இருப்போம் என, அமைச்சர்களே பேசும் அளவுக்கு ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குண்டு இருக்கிறது தி.மு.க. தந்தை, மகன், பேரன் அடுத்து கொள்ளுப்பேரனையும் தயார்படுத்திக் கொண்டு, மற்ற தகுதியானவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கட்சித் தலைமை, ஆட்சித் தலைமையைப் பறிப்பதற்கு பெயர்தான் தி.மு.க-வின் அகராதியில் சமூகநீதியா? தி.மு.க என்ற அரசியல் கட்சியின் தலைவராக, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதலமைச்சராக, என்றாவது ஒருநாள், கருணாநிதி குடும்பத்தைச் சாராத ஒருவர் வர முடியும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களால் கூறமுடியுமா... 

அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பை நடத்தும் தி.மு.க, சமூகநீதியை ஓரளவுக்குவாவது நடைமுறைப்படுத்த துணை முதல்வராக பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்குமா... அல்லது உள்துறை, நிதி, வருவாய், தொழில், பொதுப்பணி போன்ற மிக முக்கியத் துறைகளின் அமைச்சர்களாகப் பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை ஸ்டாலின் நியமிப்பாரா... வாய்ப்பிருந்தும் இதைச் செயல்படுத்துவதில் தி.மு.க-வுக்கு என்ன தயக்கம்?

மகனுக்குப் பதிலாக, பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை ஸ்டாலின், துணை முதலமைச்சராக்கி, சட்டப்பேரவையில் தனக்கு அருகில் அமர வைக்கவேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்க முடியும். கிடைக்கும் மேடைதோறும் சமூகநீதி, சமூகநீதி என முழங்கினால் மட்டும் சமூகநீதி கிடைத்துவிடாது. பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை துணை முதலமைச்சராக்கிவிட்டு, அதன் பிறகு சமூகநீதி பற்றி பேசினால், வீடு தேடி சென்று ஸ்டாலினைப் பாராட்ட தயாராக இருக்கிறேன்.

சமூகரீதியாக, கல்விரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களை கைதூக்கி விடுவதுதான் சமூகநீதி. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி, உயர் சாதி ஏழைகளுக்கு, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய பா.ஜ.க அரசு வழங்கிவிட்டது. ஏழைகள் என்றால், அனைவரும் ஏழைகள் என்றுதானே இருக்க வேண்டும். அது என்ன உயர் சாதி ஏழைகள்...' என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார். 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது உயர் சாதி ஏழைகளுக்கானது அல்ல. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கானது (EWS). இட ஒதுக்கீட்டு வரம்புக்குள் வராத சமூகத்தைச் சேர்ந்த ஏழைகள் இதனால் பயன்பெறுவார்கள். இதை மறைத்துவிட்டு அரசியலுக்காகப் பேசியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

சமூகநீதியில் பெண்ணுரிமையும் ஓர் அங்கம். அதை ஸ்டாலினே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால், வாரிசு அரசியலில்கூட, மகளை விட்டுவிட்டு, மகனைத்தான் அமைச்சராக்கியிருக்கிறார். வாய்ப்பு மறுக்கப்பட்ட, வாய்ப்பே கிடைக்காது என்ற நிலையில் இருப்பவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுதான் சமூகநீதி. அதை செய்துவிட்டு இனி, சமூகநீதி பற்றி முதலமைச்சர் பேச வேண்டும்" என்று கடுமையாக சாடியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi srinivasan about Cm speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->