ஜோதிடம் என்றால் என்ன?.. அது எப்படி உருவானது?..!! - Seithipunal
Seithipunal


இந்து மதம் ஓர் அற்புதமான மதம். இந்து மதத்தில் அனைத்திற்கும் அடிப்படையாக கருதப்படுவது கர்மா. அதாவது செயல். இந்த கர்மாவை சொல்வதே வேதங்கள்.

நான்கு வேதங்கள் இந்து மதத்தில் உள்ளன. அவை,

1.ரிக் வேதம்,
2. யஜீர் வேதம்,
3. சாம வேதம்,
4. அதர்வண வேதம்.

1.ரிக் வேதம்:

இது பழைய வேதமாகும். மனிதன் முதலில் இயற்கையை முதன்மையாக வழிப்பட்டான். அதாவது இயற்கையில் உள்ள பஞ்சபூதங்களையே வழிப்பட்டான். அந்த பஞ்சபூதங்களின் தலைவனான இந்திரனே ரிக்வேதத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் கடவுள்.

2.யஜூர் வேதம்:

இந்த வேதம் பஞ்சபூதத்தையும் தாண்டிய பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களையும் அதற்கான அதிதேவதைகளையும், அந்த அதிதேவதைகளை வணங்கும் முறைகளை சொல்லியது. ஆக நாம் பின்பற்றும் பெரும்பான்மையான வேள்விகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்தும் யஜூர் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

3.சாம வேதம்:

இந்த வேதம் அதிதேவதைகளை வணங்க பயன்படுத்தப்படும் கர்மாக்களுக்கு (வேள்விகள், பூஜைகள் மற்றும் பல) இசையை கொடுக்கும் கூடிய வேதமாக வரையறுக்கப்பட்டது. இசைக்கான அடிப்படை சாம வேதத்திலேயே உள்ளது.

4.அதர்வண வேதம்:

இந்த வேதம் தேவதைகளை வணங்குவதோடு மட்டுமல்லாது அவைகளை தன் தேவைக்கு தகுந்தவாறு கட்டுபடுத்தக்கூடிய மந்திரங்களை உள்ளடக்கியது. பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிக்கான மந்திரங்களும் இந்த அதர்வண வேதத்திலேயே உள்ளன.

ஒவ்வொரு வேதத்தின் நான்கு பகுதிகள்:  

1.சம்ஹிதை – அதாவது மந்திர ஸ்லோகங்களை உடையது.

2.பிராமணம் - சடங்குகளையும் அவற்றின் வழிமுறைகளை உள்ளடக்கியது.

3.ஆரண்யகம் - தவயோகிகள், முனிவர்கள் சொல்லிய கருத்துக்கள்.

4.உபநிடதம் - கடவுள் என்பது யார்? பரம்பொருள் என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன? போன்ற விஷயங்களை உள்ளடக்கியது.

நமது தமிழ் இலக்கியங்கள் எவ்வாறு இலக்கண வரையறைகளை கொண்டு எழுதப்பட்டவையோ, அதுபோல் வேதங்களும் ஆறு விதமான வரையறைகளை கொண்டே எழுதப்பட்டன. இவற்றிற்கு வேத அங்கங்கள் என்று பெயர்.

சமஸ்கிருதத்தில் அங்கம் என்பதற்கு தமிழில் உறுப்பு என்று பெயர். ‘ஒவ்வொரு அங்கங்களாக கழைந்தான்’ என்ற வரிகளை கேட்டிருப்பீர்கள்.

வேதாங்கங்கள் ஆறு வகைப்படும்.. அவை,

1.சீக்ஷா (நாசி) – மந்திர உச்சரிப்புகளை சொல்வது. அதாவது எவ்வாறு எழுத்துக்களை உச்சரிக்க வேண்டும் என்பதை சொல்வது. (மூன்று விதமான உச்சரிப்புகள். உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம்).

2.வியாகரணம் (வாய்) – இலக்கணங்களை வரையறுப்பது. 

3.சந்தஸ் (பாதம்) – செய்யுளுக்கான இலக்கணம் (தமிழில் யாப்பிலக்கணம் போன்றது) வரையறைப்பது 

4.நிருக்தம் (செவி) – சொல்லிற்கான இலக்கணம் (அகராதி) வரையறுப்பது.

5.ஜோதிஷம் (கண்) – வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் வைதிக கர்மாக்களை ஆற்றுவதற்கு உகந்த நேரத்தை சொல்வது.

6. கல்பம் (கை) – வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் ஒரு ஆத்மா எவ்வாறு கர்மாவை ஆற்ற வேண்டும் என்று சொல்வது. உதாரணத்திற்கு வீடு, சமுதாயம், பாடசாலை போன்ற இடங்களில் எவ்வாறு கர்மாவை அனுஷ்டிக்க வேண்டும் என்ற நடைமுறை சாஸ்திரங்களை உள்ளடக்கியது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

1.தர்ம சாஸ்திரம்

2.க்ருஹ்ய சாஸ்திரம்

3.ஸ்ரௌத சாஸ்திரம்

இதில் ஜோதிஷம் என்பது வேதத்தின் ஐந்தாவது அங்கம். வேதத்தில் சொல்லப்பட்டுள்ள வைதிக கர்மாக்களை எந்த நேரத்தில் அனுஷ்டிக்க வேண்டும் என்பதை சொல்வதே ஜோதிஷம்.

ஜோதிஷம் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். அதாவது ஜோதியை பற்றி விளக்குவது. ஜோதி என்றால் ஒளி என்று பொருள். நமக்கு சக்தியை அளிப்பது இந்த ஒளியேயாகும்.

வானில் எண்ணற்ற நட்சத்திரங்கள் உள்ளன. அதில் 27 நட்சத்திரங்களை நமது முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். நட்சத்திரம் என்பது ஒளியை உமிழும் கோளம். கிரகம் என்பது நட்சத்திர ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கும் கோளம்.

நமது பூமியை சுற்றி காற்று மண்டலம் உள்ளது. இந்த காற்று மண்டலம் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ஒளியால் (கதிர்வீச்சால்) மாற்றமடைகிறது. நாம் அந்த காற்றை சுவாதிப்பதின் மூலம், நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் பிரதிபிலிக்கும் ஒளியின் சக்தி நம்மை வந்தடைகிறது. இந்த பூமியில் ஜெனிக்கும் ஒவ்வொரு உயிரினமும், தனது முதல் சுவாசத்தை தொடங்குவதின் மூலம் ஒளியின் சக்தியை பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. அதனுடைய இறுதி சுவாசம் நின்று போகும் வரை இந்த பூமியில் ஒளியின் சக்தியை பெற்று வாழ்கின்றன.

இந்த ஒளி சக்தியானது ஒவ்வொரு உயிரினமும் வாழும் காலத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை எடுத்துரைப்பதே ஜோதிஷம். 

ஜோதிஷம் என்பது வேதத்தின் ஓர் அங்கம். அதாவது வேதத்தின் கண் என போற்றப்படுவது. மிகவும் உயர்ந்தது. இது மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை

1.சித்தாந்த ஸ்கந்தம்:

அடிப்படை கணிதவியல் கணக்குகளை உள்ளடக்கியது. அதாவது கூட்டல், கழித்தல், அல்ஜீப்ரா கணிதம், திரிகோணமிதி சமன்பாடுகள் போன்ற கணிதவியலை உள்ளடக்கியது.

2.சம்ஹித ஸ்கந்தம்:

சித்தாந்த ஸ்கந்தத்தை பயன்படுத்தி வானில் நகரும் கிரகங்களின் நகர்வுகளை கணிக்கும் அஸ்ட்ரானமி விஷயங்களை உள்ளடக்கியது.

3.ஹோரா ஸ்கந்தம்:

கிரகங்களின் நகர்வுகளால், பூமியில் ஏற்படும் மாற்றங்களையும், பூமியில் வாழும் ஆத்மாக்களின் மீது கிரகங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தையும் கூறுகிறது. இதையே ஜோதிடர்களான அனைவரும் நடைமுறையில் பயன்படுத்துகிறோம். ஆங்கிலத்தில் அஸ்ட்ராலஜி என்று பெயர்.

வேதத்தின் அங்கமான ஜோதிஷத்தோடு கூடிய நான்கு வேதங்களும் பிரம்ம தேவனின் கையில் உள்ளது. படைக்கும் கடவுளான பிரம்மதேவனே வேதத்தை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு ஆத்மாவிற்கான பிறவியையும், அந்த பிறவியில் அதன் தலைவிதியையும், அந்த தலைவிதிக்கான கிரக அமைப்புகளையும் வரையறுக்கிறான்.

ஆக வேதத்தையும், வேதத்தோடு கூடிய ஜோதிஷத்தையும், அந்த ஜோதிஷ ஞானத்தை கொண்டு அனைவரது தலையில் விதியையும் எழுதும் மாபெரும் ஜோதிடன் பிரம்மதேவனே ஆவான்.

பிரம்மாவால் படைப்புத்தொழிலில் உதவிபுரிவதற்காக பிரம்மானால் படைக்கப்பட்ட வசிட்டர், மரீசி, அத்திரி, அங்கிரசர், புலஸ்தியர், புலகர், தட்சன் மற்றும் கிரது ரிஷிகள் ஆவர். இவர்கள் பிரம்மாவின் மானசப் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர். இவர்களே பிரம்மாவிடமிருந்து வேதத்தை கற்றவர்கள். அந்த வேதத்தோடு கூடிய ஜோதிஷத்தையும் கற்றவர்கள். வசிஷ்டரின் பிள்ளை சக்தி. அந்த சக்தியின் பிள்ளை பராசரர். இவரே வேதத்திலிருந்து பிரித்து ஜோதிஷத்தை தனியொரு படைப்பாக மாற்றியவர்.

அதற்காக மற்றவர்கள் ஜோதிஷ குறிப்பை எழுதாமல் இல்லை. பிருகு ரிஷி தனியொரு படைப்பாக எழுதியுள்ளார். அது பிருகு நாடியாக தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. சப்த ரிஷிகளும் சொல்லிய ஜோதிஷ குறிப்புகள் சப்த ரிஷி நாடி என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது.

வேதத்தின் அங்கமான ஜோதிஷம் பூமியில் கிரங்கங்களின்  ஒளி ஏற்படுத்தும் தாக்கத்தை கொண்டு பூமியில் இன்னது நடக்கும் என்று சொல்லுமே தவிர, நடக்க போவதை நமக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ளவோ அல்லது நீக்கவோ முடியும் என்பதை ஒருபோதும் ஜோதிஷம் சொல்லவே சொல்லாது.

உதாரணத்திற்கு பூமியில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொரோணா எந்த தருணத்தில் வரும். அது பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். எப்பொழுது மறையும் என்பதை ஜோதிஷம் சொல்லுமே தவிர, வரப்போகும் கொரானாவை செவ்வாய் கிரகத்திற்கு மாற்றிவிட்டு நாம் தப்பித்து கொள்ளலாம் என்பதை ஜோதிஷம் சொல்லவே சொல்லாது.

அதாவது பரிகாரம் என்பதன் மூலம் நடக்க போவதை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை ஜோதிஷம் ஒரு போதும் சொல்லவே சொல்லாது. பரிகாரம் என்பது ஜோதிஷத்தில் கிடையவே கிடையாது. ஜோதிடர்கள் உங்களுக்கு பரிகாரம் செய்தால், அவரவர் சுயலாபத்திற்கே அன்றி, ஜோதிஷத்தில் நடப்பதை மாற்றிக் கொள்ள முடியும் என்ற விதிமுறை கிடையாது. 

ஜோதிஷம் இன்னது நடக்கும் என்று சொல்லுமே தவிர, நடப்பதை மாற்றிக் கொள்ள முடியும் என்று ஜோதிஷம் சொல்லாது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

What is Jothidam How it Create


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->