இதுவரை இல்லாத அளவிற்கு மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு.! இத்தனை கோடியா?!
UNION BUDGET 2022 SPORTS
மத்திய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு விளையாட்டுத் துறைக்கு ரூ.3,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இங்கிலாந்தில் காமன்வெல்த் போட்டிகளும், சீனாவில் ஆசிய போட்டிகளும் நடைபெற உள்ளன. 2024 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இவ்வாறான பல போட்டிகளுக்கு இந்திய வீரர்களை தயார்படுத்த வேண்டி இருக்கிறது. இதற்கு அதிகப்படியான வசதிகள் தேவைப்படுவதால் நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்க வேண்டும் என விளையாட்டுத்துறை சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு மொத்தமாக ரூ.3062.60 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கடந்த ஆண்டு பட்ஜெட்டை காட்டிலும் இது ரூ.305.58 கோடி அதிகம் ஆகும். பட்ஜெட் வரலாற்றில் இந்த அளவு பெரியத் தொகை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது கிடையாது. விளையாட்டுக்கென ரூ.3000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கீடு செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மத்திய பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2020 - 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.2827 கோடி விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் அந்த ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் உள்நாட்டு போட்டிகள் கொரோனா தொற்று பரவலால ஒத்திவைக்கப்பட்டன. இதனால் அறிவிக்கப்பட்ட நிதியானது ரூ.1878 கோடியாகக் குறைக்கப்பட்டது. 2021-2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் விளையாட்டுத்துறைக்கு ரூ.2596 கோடி ஒதுக்கப்பட்டது. இது போதுமானதாக இல்லை என்றும் இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. அதனடிப்படையில் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி விளையாட்டுத் துறைக்கு நிதி ஒதுக்கீடு ரூ.2757.02 கோடியாக அதிகரிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறைக்கு நேற்று அறிவிக்கப்பட்ட ரூ. 3062.60 கோடியில், பள்ளிகள் கல்லூரிகள் அளவில் இருந்தே விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்காக தற்போதைய மத்திய அரசால் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை ரூ.974 கோடியாக உயர்த்தப் பட்டுள்ளது.
மேலும் விளையாட்டு துறையில் சாதிக்கும் வீரர் வீராங்கனைகள் உள்ளிட்டோர் கான பரிசுத்தொகை விருதுகள் ஆகியவற்றிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தொகை ரூ. 357 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நலப்பணி திட்டங்களுக்கான ஒதுக்கீட்டு தொகை ரூ. 283.50 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் அளவில் மேற்கொள்ளப்படும் நாட்டு நலப்பணித்திட்டமானது மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.