திமுக இஃப்தார் நிகழ்ச்சிக்கு குப்பை வண்டியில் உணவுப் பொருள் - அதிமுக கடும் கண்டனம்!
AIADMK Condemn to DMK
சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 26.03.2025 அன்று திமுக சார்பில் உதயநிதி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி குப்பை வண்டிகளில் உணவுப் பொருட்கள் கொண்டுவரப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் ஐடி விங்க் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "எந்த மேடையில் மைக் கிடைத்தாலும், "நாங்கள் மட்டும் தான் சிறுபான்மையினரின் ஒரே காவலர்கள்" என்று சொல்லும் திமுக-வின் உண்மையான முகம் இது தான்.
எல்லோரும் இன்புற்று வாழவேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் உணவை இப்படி மாநகராட்சி குப்பை வண்டியில் எடுத்து வருவது இஸ்லாமிய மக்களை அவமானப்படுத்தும் செயல். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தனக்கு வாக்களித்த மக்களை இந்த மன்னராட்சியின் இடைக்கன்று நடத்தும் விதம் இது தான் என்றால், இவர்களின் எண்ணம் எப்படிப்பட்டது என்பதை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
சிறுபான்மை மக்களை #AprilFools-ஆக நினைத்து, வெறும் வாக்கு அரசியலுக்காக மட்டும் அவர்களின் நண்பர்களைப் போல வேடமிட்டு ஏமாற்றும் கபடதாரிகள் தான் என்பதை இந்நிகழ்வு நிரூபித்துவிட்டது.
இஸ்லாமியப் பெருமக்களிடம் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.