மயிலாடுதுறையில் டாஸ்மாக் மதுவால் இருவர் பலி.. செந்தில்பாலாஜி பதவிவிலக வேண்டும் - அண்ணாமலை போர்க்கொடி!
Annamalai BJP Say About Mayiladuthurai Tasmac Death
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பழனி குருநாதன், பூராசாமி ஆகியோர் நேற்று மாலை டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
மது அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
இருவரின் உயிரிழப்பிற்கு டாஸ்மாக் மதுதான் காரணம் என்று, மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மயிலாடுதுறை அருகே, டாஸ்மாக் மது அருந்தியதால், மீண்டும் இருவர் மரணம் அடைந்துள்ளதாக நாளிதழில் வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
சாராயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு ஒவ்வொரு முறையும் புதிய காரணங்களைக் கண்டுபிடித்துச் சொல்லும் தமிழக அரசு, இம்முறை என்ன காரணத்தைச் சொல்லப் போகிறது?
பொதுமக்களின் உயிருக்குச் சிறிதும் மதிப்பில்லாத நிலை தமிழகத்தில் நிலவுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக, கண்துடைப்புக்காக நடவடிக்கை எடுப்பது போல் நடித்ததன் விளைவு, மீண்டும் இரு உயிர்கள்.
உடனடியாக, சம்பந்தப்பட்ட மது ஆலையை மூட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அந்த ஆலையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள மது பாட்டில்களைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், மக்கள் உயிரைப் பற்றிக் கவலையில்லாமல், பத்து ரூபாய் வசூலில் மட்டுமே குறியாக இருக்கும் துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
Annamalai BJP Say About Mayiladuthurai Tasmac Death