நாங்க தான் இதை முன்னெடுத்தோம்...! தமிழக அரசின் அரசாணையை வரவேற்ற அண்ணாமலை!
Annamalai Say About TNGO
தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்த தமிழக அரசின் அந்த அரசாணையில், தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வுக் கால பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பிஎஃப்) வழங்க ரூ.38.73 கோடி அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது.
இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி தமிழக அரசு ஆணி பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், பாஜக கொடுத்த அழுத்தத்தின் பேரின் தமிழக அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி உள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், தமிழக அரசு, போக்குவரத்துத் துறை ஓய்வூதியர்களுக்கு, ஓய்வுக்கால பணப்பலனுக்காக ரூ.38 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. கடந்த 18 மாதங்களாக, ஓய்வூதியர்களுக்கான பணப்பலன் வழங்காமல் இருந்த தமிழக அரசு, தமிழக பாஜக இந்தப் பிரச்சினையை முன்னெடுத்ததும், நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கிறோம்.
மேலும், கடந்த 102 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும், போக்குவரத்துத் துறை ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி உயர்வையும், உடனடியாக வழங்கும்படி, தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.