#BREAKING || உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி..!!
Assets of Udhayanithi Trust are frozen by ED
முன்னணி சினிமா பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த ரெட் ஜெயன்ட் பட தயாரிப்பு நிறுவனத்துடன் கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றி இருந்தனர். அதே நாளில் உதயநிதி பவுண்டேஷன் அறக்கட்டளை தொடர்புடைய எட்டு இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் சென்னை வேளச்சேரியில் உள்ள உதயநிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மேலும் எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் நடத்தி வரும் வழக்கறிஞர் பாபு என்பவர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் பொழுது பாபு இல்லாததால் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டிருந்தனர். அதன் அடிப்படையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாபு ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார். மேலும் லைக்கா நிறுவனம், உதயநிதியின் ரசிகர் மன்ற நிர்வாகி அலுவலகம், உதயநிதி நண்பர் வீடு என பல இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதன்மூலம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் உயர்நிதி அறக்கட்டளையை நிர்வகித்து வரும் அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகாவின் 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதே போன்று கிருத்திகா உதயநிதியின் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
நேற்று முதல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா நிர்வகித்து வந்த உதயநிதி அறக்கட்டளையின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள சம்பவம் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Assets of Udhayanithi Trust are frozen by ED