சென்னையில் நேற்று இரவு போலீசாரிடம் சிக்கிய 70 பேர்., மக்களே உஷார்.!
Chennai Lockdown jan 23
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அந்த வகையில், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை ஜனவரி 31-ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், மூன்றாவது வாரமாக இன்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசியமான மருத்துவம், பால், மற்றும் பத்திரிக்கை பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி காரணமின்றி வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக 70 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 173 வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் 7.87 லட்சம் ரூபாய் அபராத வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களிடம் 1.50 லட்சம் ரூபாய் அபராத வசூல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது' என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.