பருவமழை : சென்னையில் மூவாயிரம் குடிநீர் மாதிரிகள் சோதனை.!
chennai northeast rain three thousand water samples test
சென்னையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு குடிநீரின் தரத்தை உறுதிசெய்வதற்கு ஆய்வகத்தின் மூலம் நாளொன்றுக்கு 300 குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்படுகிறது. குடிநீரில் கலந்துள்ள குளோரின் அளவு மற்றும் திடப்பொருள்களின் அளவு குறித்து மூவாயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது. இதையடுத்து ஆங்காங்கே குடிநீரில் தேவைக்கேற்ப குளோரின் சேர்ப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, குடிநீர் விநியோக நிலையங்களுக்கு தேவையான பிளீச்சிங் பவுடர், படிகாரம் மற்றும் சுண்ணாம்பு உள்ளிட்ட ரசாயன பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், குடிநீர் விநியோக நிலையங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு நீர் உறிஞ்சும் எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கழிவு நீர் அடைப்பு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து, அதனை 500 கழிவுநீர் எந்திரங்கள் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. இதையடுத்து, கழிவு நீர் அடைப்பு, கழிவுநீர் தேக்கம், மழைநீர் அகற்றும் பணிகளை சீர் செய்யும் வகையில் இரண்டாயிரம் களப்பணியாளர்கள் 24 மணி நேரமும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கூடுதலான கழிவுநீர் ஊர்திகள் தேவையிருப்பின் அங்கீகரிக்கப்பட்டவர்களிடமிருந்து வாடகைக்கு எடுத்துக்கொள்வதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது.
பின்னர், இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை ஆய்வு செய்வதற்கு அனைத்து பகுதிகளிலும் செயல் பொறியாளர்கள் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வருகின்றனர். இதற்காக அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு குழாய்கள் மற்றும் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையினால், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் புகார் பிரிவு 24 மணிநேரமும் செயல்பட்டு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் பொதுமக்கள் தங்களுடைய குடிநீர் மற்றும் கழிவுநீர் புகார்களை 044-4567 4567 மற்றும் கட்டணமில்லா எண் 1916 தொடர்பு கொண்டு பயனடையலாம்" என்று சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
chennai northeast rain three thousand water samples test