எழும்பூர் | ஒரே சாலையில் 2 டாஸ்மாக்! குற்ற செயல்களில் ஈடுபடும் குடிமகன்கள்! நடவடிக்கை எடுக்கப்படுமா?
Egmore road side drinking alcohol
சென்னை, எழும்பூரில் சென்ட்ரலுக்கு அடுத்து 2-வது பெரிய ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், புறநகர் ரெயில் சேவை மற்றும் மெட்ரோ ரெயில் நிலையமும் அமைந்துள்ளதால், 24 மணி நேரமும் எழும்பூர் ரெயில் நிலையம் பரபரப்பாக இருக்கும். இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்த ரெயில் நிலையத்தை சுற்றிலும் ஏராளமான ஓட்டல்கள் மற்றும் கடைகள் உள்ளன. ஆனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரே ரோட்டில் 2 டாஸ்மாக் கடைகள் இருப்பதுதான் வேதனையை அளிக்கிறது.
ரெயில் நிலையத்திற்கு அருகே பேருந்து நிறுத்தம் எதிரில் அன்னை ஈ.வி.ஆர்.மணியம்மையார் சாலையில் ஒரு கடையும், அதே சாலையில் மறு முனையில் மற்றொரு கடையும் இயங்கி வருகிறது.
ரெயில் நிலையத்துக்கு வரும் வெளியூர் பயணிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த குடிமகன்கள் அனைவரும் இந்த கடைகளில் தான் மது வாங்குகிறார்கள். அதில் பெரும்பாலானோர் சாலையோரம் நின்று கொண்டு மது குடிப்பதுதான் அதிர்ச்சி அளிக்கிறது.
அவர்கள் திறந்தவெளி 'பார்' ஆக கடையை சுற்றியுள்ள பகுதிகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மாலை முதல் இரவு வரை வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் இந்த சாலையில் நின்றுதான் பயணிகளை ஏற்றி செல்கின்றன.
பொது இடங்களில் மது குடிக்கவோ புகை பிடிக்கவோ அனுமதி இல்லை. ஆனால் மதுபிரியர்கள் இதை காற்றில் பறக்க விட்டுவிட்டு இதுபோன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குடிப்பதோடு மட்டுமல்லாமல் மது பாட்டில்களை அவர்கள் அப்படியே சாலைகளில் வீசி எறிவதால் பாட்டில்கள் உடைந்து சிதறி கிடக்கிறது.
எனவே இந்த மதுக்கடைகளை அகற்றி வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Egmore road side drinking alcohol