8 மணி நேரம்! தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன்! இபிஎஸ், ஓபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் விடுத்த வாழ்த்துச்செய்தி! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி K. பழனிசாமி விடுத்துள்ள "மே தின" வாழ்த்துச் செய்தி : உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த "மே தின" நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். தொழிலாளர்கள் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

உரிமைகள் மறுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட உழைக்கும் வர்க்கம் தங்களின் உரிமைக்காகவும், நலனிற்காகவும் பல நூற்றாண்டுகளாகப் போராடி அடிமை விலங்கினை உடைத்தெறிந்து தங்கள் உரிமைகளை மீட்டெடுத்த திருநாள் மே தின திருநாளாகும்.

"இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி! உருக்குப்போன்ற தன் கரத்தையே நம்பி ஓங்கி நிற்பவன் தொழிலாளி”

என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் தொழிலாளர்களின் சிறப்புகளை தனது உணர்ச்சிமிகு பாடலின் மூலம் தெளிவுபடுத்தி உள்ளார்.

கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களும் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி உள்ளனர். தொடர்ந்து, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியிலும், தொழிலாளர்கள் நலன் கருதி முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.

உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளப் பெருமக்கள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது நெஞ்சார்ந்த "மே தின வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிச்சாமி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் எனது உளமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

1886 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு 'எட்டு மணி நேர வேலை' கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியதுதான் மே தினம் உருவானதற்கான அடித்தளம். உழைப்பின் உயர்வை நன்கு உணர்ந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மானிட சமுதாயத்தில் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்தினரே முதன்மையானவர்கள் என முழங்கினார்.

'எட்டு மணி நேர வேலை' உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகளுக்குப் பின்னால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் உயிர் தியாகங்களும், இரத்தம் தோய்ந்த சிவப்பு வரலாறும் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலைக்கு ஆபத்து வந்தவுடன் அதற்கு எதிராக குரல் கொடுத்து அதனைத் தடுத்து நிறுத்திய இயக்கம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் கண்டெடுத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் என்பதையும், தொழிலாளர்களின் பாதுகாப்பு அரணாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் செயல்படும் என்பதையும் இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

"உழைப்பே உயர்வு தரும்" என்பதன் அடிப்படையில், நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதை தெரிவித்துக் கொண்டு, தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த "மே தின" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்." என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். 


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "மே தினத்தையொட்டி, தொழிலாளத் தோழர்களின் வருங்கால வாழ்வு சிறக்க இறைவன் துணை நிற்க வேண்டி, த.மா.கா சார்பில் மே தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "உலகமெங்கும் வாழும் தொழிலாளர்களின் இன்னல்கள் தீர்ந்து ஒற்றுமையுடனும் ஒருமைபாட்டுடனும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்த நாளில் தொழிலாளர்களுக்கு மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளை பாதுகாக்கவும், தொழிலாளர் விரோத போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் மே தினத்தில் உறுதி ஏற்போம். 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தொழில் வளர்ச்சி குன்றிய நிலையில் ஏற்பட்ட வேலை இழப்பினால் தொழிலாளர்களின் வாழ்வில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிற நிலையில் தங்களது உரிமைகளை பாதுகாக்கிற வகையில், உரிமைக்குரல் எழுப்பும் நாளாக மே 1-ந் தேதி அமைய வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS EPS GK vasan KS Alagiri Vaiko may day wish


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->