முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம்..!
today dmk working meeting
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
இதனால் 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படும். மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இந்த தி.மு.க. செயற்குழு கூட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில், பொதுச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
English Summary
today dmk working meeting