உக்ரைனுடன் நிபந்தனைகளுடன் கூடிய போர் நிறுத்தத்திற்கு தயார்; ரஷ்யா அதிபர் புடின்..!
Ready for a conditional ceasefire with Ukraine Russian President Putin
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே வெள்ளை மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. குறித்த பேச்சு வார்த்தை வாக்குவாதத்தில் முடிய ஜெலன்ஸ்கியை உடனடியாகி வெளியேறும் படி ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இதையடுத்து, உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அமெரிக்கா அதிரடியாக நிறுத்தியதோடு, தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என, டிரம்ப் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உக்ரைன் உடன் குறுகியகால தற்காலிக போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாகவும், அதற்கான பேச்சுக்கு தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். அந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அமைதிக்கான இறுதி தீர்வை நோக்கிச் செல்வதாக இருக்க வேண்டும் என்று புடின் நிபந்தனை விதித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, 'இறுதி போர் நிறுத்த ஒப்பந்த விதிகளில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும்; அமைதி பணிகளில் எந்தெந்த நாடுகள் பங்கு வகிக்கும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்' என்றும் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா, உக்ரைன் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, மேற்கு ஆசிய நாடான சவுதி அரேபியாவில் நாளை மறுதினம் நடக்கவுள்ளது. இதன்போது புடின் தெரிவித்த போர் நிறுத்த ஒப்பந்த நிபந்தனைகள் குறித்தும் பேசப்படும் என கூறப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் முழு தயாராக இருக்கிறது' என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Ready for a conditional ceasefire with Ukraine Russian President Putin